காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் மணவாள மாமுனிகள் ஜெயந்தி
காரமடை: வைணவ ஆச்சாரியர்களில் முதன்மையானவரான மணவாள மாமுனிகள் ஜெயந்தி விழா இன்று காரமடை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்தது.
மூலவருக்கு திருமஞ்சனமும், காலசந்தி பூஜை நடந்தது. உற்சவர் மணவாள மாமுனிகள் ராமானுஜர் சன்னிதியில் எழுந்தருளினார். அங்கு விஸ்வக்ஷேனர் ஆராதனை, புண்யாகவாசனம், லட்சுமி நாராயண பூஜை, கலச ஆவாஹனம் நடந்தது. மூலவர் ராமானுஜர், உற்சவர் மணவாள மாமுனிகளுக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சகல திரவியங்களால் ஸ்னபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பட்டு வஸ்திரம் அணிந்து, வெண்பட்டு குடை சூழ, மேளதாளம் முழங்க ரங்க மண்டபத்தில் அரங்கநாதர் முன் மணவாள மாமுனிகள் எழுந்தருளினார்.அங்கு பெருமாளிடமிருந்து மாலை, சடாரி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்தலத்தார், பட்டர் ஆகியோர் பரிவட்ட மரியாதையுடன், உபதேச ரத்தின மாலை பாசுரங்களை சேவித்தனர். திருக்கோயிலை வலம் வந்த மணவாள மாமுனிகள் மீண்டும் ராமானுஜர் சன்னதியை அடைந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.