பெயர்ச்சியடைந்தார் கேது பகவான்: கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் பரவசம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு மற்றும் கேது பகவான்கள் ஒன்றை ஆண்டுக்கு ஒரு முறை பின்னோக்கி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். இதனிடையே கேது பகவான் மாலை 5 மணி 14 நிமிடத்திற்கு கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை ஒட்டி நேற்று முன்தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இதை அடுத்து நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பரிகார பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு கேது பகவானுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கேது பகவானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 5:14 மணிக்கு கேது பெயர்ச்சி தீபாரதனை காண்பிக்கப்பட்டது கேது பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ராசியினர் பரிகாரம் செய்து கொள்ளலாம். இதில் கோவில் தக்கார் ராணி, செயல் அலுவலர் ரம்யா, திருவெண்காடு கோவில் செயல் அலுவலர் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கேது பகவானை தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் பட்டு குருக்கள் தலைமை ஆனோர் செய்து வைத்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.