நிலக்கல் பார்க்கிங்கில் வெளி மாநில பக்தர்கள் அவதி
சபரிமலை: நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சபரிமலை வரும் பஸ்கள், வேன்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலம் பம்பை செல்ல வேண்டும். இந்த பார்க்கிங் கிரவுண்ட் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. ஆனால் எந்த வாகனம் எங்கு நிற்கிறது என கண்டு பிடிப்பது சிரமம். போதிய வழிகாட்டுதல் போர்டு இல்லை. மலையேறி தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், உடல் தளர்ச்சியுற்று வருகின்றனர். இங்கு வந்த பின்னர் தங்கள் வாகனங்களை கண்டு பிடிக்க முடியாமல் அலைவது தினசரி காட்சியாக உள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் நிலக்கல்லில் தவிக்கும் சூழ்நிலையும் பக்தர்களுக்கு ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநிலங்கள் வாரியாக எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை வரைபடத்துடன் கூடிய போர்டுகளாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.