உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு: நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு

ஞானசம்பந்தர் பாடல் பதிக கல்வெட்டு: நெல்லையப்பர் கோவிலில் உடைப்பு

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் சீரமைப்பு பணிகளின்போது, பழமையான கல்வெட்டை உடைத்து குப்பையில் வீசியதால், பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர். திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில், 2004 ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, டி.வி.எஸ்., உள்ளிட்ட உபயதாரர்களின் முயற்சியால், 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல்லையப்பர் சன்னதிக்கு அருகே, கச்சேரி விநாயகர் முன்புறம் உள்ள சுவர்கள் இடித்து புதிய பூச்சு நடக்கிறது. அந்த இடத்தில், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற பதிகங்களை, 1950ல், திருப்பனந்தாள் காசி திருமடம் சுவாமிகள், வெள்ளை பளிங்கு கல்லில் பொறித்து வழங்கியிருந்தார். அந்த கல்வெட்டுக்களை நேற்று நடந்த பணிகளின்போது உடைத்துவிட்டனர். அதன் உடைந்த பகுதிகளை, டவுன் ஆர்ச் அருகே உள்ள தாமரைக்குளம் குப்பை யில் வீசியுள்ளனர். இதைக் கண்ட சிவனடியார்கள் கொதித்தெழுந்தனர். பக்தர்கள் தரப்பில் கூறுகையில், ‘பழமையான சிவன்கோவிலின் தொல்லியல் சின்னங்களை தகர்க்கும் நோக்கோடு செயல்படுகின்ற னர். கல்வெட்டு இடிபடும்போது அதிகாரிகள் கவனித்திருக்கவேண்டும்’ என்றனர். கோவில் செயல் அலுவலர், ரோஷினியிடம் கேட்டபோது, ‘சுவரை இடித்து பூசும்போது, பழைய கல்வெட்டு உடைந்துவிட்டது,  அதே இடத்தில், மீண்டும் புதிய கல்வெட்டில், திருஞானசம்பந்தரின் பாடல் பொறித்து தருவதாக உபயதாரர் தெரிவித்துள்ளார். மற்றபடி அறநிலையத்துறை, தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டே பணிகள் நடக்கிறது’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !