உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச கருட சேவை: பக்தர்கள் பரவசம்

பஞ்ச கருட சேவை: பக்தர்கள் பரவசம்

சேலம்: பஞ்ச கருட சேவையில் அருள்பாலித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஆண்டாள் அறக்கட்டளை இளைஞர் குழு சார்பில், 38ம் ஆண்டு, பஞ்ச கருடசேவை, நேற்று, சேலம், கோட்டை வளாகத்தில் துவங்கியது. கோட்டை அழகிரிநாதர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயணர், அம்மாபேட்டை பாவ நாராயணர் உற்சவர்கள், தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி, மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில், உலா வந்தனர்.

இரவு, 7:00 மணிக்கு, கோட்டை வளாக விழா பந்தலை வந்தடைந்த உற்சவர்கள், பஞ்ச கருட சேவையில், அடுத்தடுத்து வரிசையாக அமர்ந்து, ஒருசேர காட்சியளித்தனர். கற்பூர தீபாராதனை செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வரிசையில் நின்று, சுவாமியை தரிசித்தனர். அவர்களுக்கு, துளசி, மஞ்சள், குங்குமம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு, 9:00 மணிக்கு, உற்சவர்கள் வீதியுலா சென்று, கோவிலை சென்றடைந்தனர். கோட்டை அழகிரிநாதர் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மாலை, 6:00 மணிக்கு பரதநாட்டியம், இரவு, 9:00 மணிக்கு சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 11:30 மணிக்குமேல், 2:30 மணிக்குள், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம், விருந்து நடக்கிறது. சுதர்சன பட்டாச்சாரியார் கூறுகையில், திருமணமாகாதவர்கள், தடையை போக்க, பஞ்ச கருட சேவையை தரிசித்தால், சர்ப தோஷம், கால சர்ப தோஷம், கலப்பிர தோஷம் நீங்கி, திருமண வைபவம் கைகூடும். சகல சவுபாக்கியமும் பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !