சபரிமலையில் மீண்டும் காட்டு யானைகள் : கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் ஓட்டம்
சபரிமலை : மகரஜோதி உற்சவம் துவங்க உள்ள நிலையில், டிச. 29 இரவு, சபரிமலை சன்னிதானம் அருகே கடைகள் நிறைந்த பகுதியில், காட்டு யானைகள் கும்பலாக நின்றதால், பதட்டம் ஏற்பட்டது. கேரளா சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல உற்சவம் முடிந்து, மகரஜோதி உற்சவத்திற்காக, டிச. 29 திறக்கப்பட்டது. இந்நிலையில், டிச. 29 இரவு 7.30 மணியளவில், சன்னிதானம் அருகே பாண்டித்தாவளம் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளின் பின்னால், காட்டு யானை கூட்டம் தென்பட்டன.
இதை பார்த்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து கடைகளை மூடி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்ததும், வனத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் யானைகளை நோக்கி தீப்பந்தங்களை எறிந்தனர். மேலும், வெடியோசை மற்றும் சிறுத்தை ஒலியை எழுப்பியபடி இருந்தனர்.
ஆனாலும், காட்டுயானைகள் அவற்றை கண்டுகொள்ளாமல், அங்கேயே நின்றிருந்தன. இருப்பினும், வனத் துறையினர் ஒரு மணிநேரத்திற்கு மேல் மேற்கொண்ட இடைவிடாத முயற்சியினால், காட்டு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் மெதுவாக செல்லத் துவங்கின. காட்டுயானைகள் அடிக்கடி, பாண்டித் தாவளம், பெரியானைவட்டம், பம்பை, ஹில்டாப், நிலக்கல் பகுதிகளில் தென்பட்டு வருவதால் பக்தர்கள், வியாபாரிகள் இடையே அச்சமும், பதட்டமும் நிலவி வருகிறது.