சேலத்தில் பங்குனி உத்திரத்தையொட்டிமுருகனுக்கு அரோகரா... பங்குனி உத்திரம் கோலாகலம்
சேலம்: பங்குனி உத்திரத்தையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள முருகன் கோவில்களில், நேற்று (மார்ச் 30)ல், சிறப்பு பூஜை நடந்தது.
சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், காலை, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவசம், தங்க கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. குமரகிரி தண்டாயுத பாணி கோவிலில், சிறப்பு அதிகாலை பூஜை நடந்தது. அங்கு, அம்மாபேட்டை, கொண்டலாம் பட்டி, உடையாப்பட்டி பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் பால் காவடி எடுத்து வந்தனர். அதன்மூலம், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஊத்துமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில், முருகன், மயில் வாகன த்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், அம்மா பேட்டை ராமலிங்கம் சுவாமி தெருவில், பாவடி நண்பர்கள் குழு சார்பில், வள்ளி, தெய்வானை, முருகன் ஆகியோர், இடும்பனுடன் காட்சியளித்தனர். மேலும், ஜாகீர் அம்மாபாளையம் பழநியாண்டவர் ஆசிரமம், அம்மாபேட்டை கந்தகிரி, பேர்லேண்ட்ஸ் முருகன் உள்பட, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில், அரோகரா கோஷத்துடன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அசைந்தாடி வந்த தேர்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தலைவாசல், வடசென்னி மலை, பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று(மார்ச் 30)ல்அதிகாலை, 108 பால்குடங்களுடன், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் பாலசுப்ர மணியர், வெள்ளி கவசத்துடன், ராஜ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, காட்டுக் கோட்டையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்தனர். தொடர்ந்து நடந்த தேரோட்டத்தை, கெங்கவல்லி எம்.எல்.ஏ., மருதமுத்து, ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி ஆகியோர் வடம்பிடித்து துவக்கிவைத்தனர். கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பியபடி, உற்சாகத்துடன் தேரை இழுத்து வந்தனர். அப்போது, நெல், கடலை, உப்பு போன்றவற்றை, தேர் மீது வீசி, மக்கள் வழிபட்டனர். தேரில், பாலசுப்ரமணியர், தெய்வானை, வள்ளியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலம்: வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம், கந்தசாமி கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி, தெய்வானை ஆகியோருடன் கந்தசாமி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு காப்பு கட்டுதல், வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீட்டிலிருந்து வாழைப்பழம், தேங்காய், இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள், பழ வகைகள், அரிசி, பட்டு வேட்டி, சேலை களை, தாம்பூலத்தில் வைத்து, சீர்வரிசை பொருட்களை, மேளதாளத்துடன் ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர். பின், திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில், சோமே ஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.