பக்தர்கள் வெள்ளத்தில் குலுங்கியது திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலின், தேர் திருவிழாவில், நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், திருக்கழுக்குன்றமே குலுங்கியது. தொண்டை மண்டலத்தில், 28வது பெரிய சிவஸ்தலமாகவும், சமயகுரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் திருக்கழுக்குன்றம் விளங்குகிறது. நான்கு வேதங்களும் போற்றும் வகையில், இங்குள்ள பெரிய மலையின் மீது எழுந்தருளியுள்ள வேதகிரீஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலின் சித்திரை பெருவிழா, ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வேதகிரீஸ்வரர் தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 22ம் தேதி, 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. இதையடுத்து, முக்கியமான பிரதான விழாவான, தேர்த் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் வேதகிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். காலை, 6:00 மணிக்கு, தேரடியிலிருந்து ஐந்து தேர்களையும், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க துவங்கினர். அப்போது, ‘நமச்சிவாயா... வேதகிரீஸ்வரா...’ என, மெய் சிலிர்க்க கோஷங்கள் எழுப்பினர்.
லட்சக்ணக்கான பக்தர்கள் குவிந்ததால், மக்கள் வெள்ளத்தில் திருக்கழுக்குன்றமே குலுங்கியது. தேர் வரும் வீதிகளான மேட்டுத்தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெருவில், நீர், மோர், தண்ணீர், பிரசாதங்கள் தானமாக வழங்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் நகருக்குள் வரும் கல்பாக்கம், புதுப்பட்டினம், இரும்புலிச்சேரி தடம் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு, புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வேதகிரீஸ்வரர் மலை, பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பகல், 1:00 மணிக்கு, ஐந்து தேர்களும், கோவில் முன்புள்ள தேரடியை அடைந்தன.