மரத்தோடு ஐக்கியமான நாக கன்னி
ராஜாபாளையம்: நம்மில் பலர் ஆரோக்கியத்திற்காக, கடன் சுமை அகல, பிள்ளை வரம், இப்படிப் பல காரணங்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். அத்தனை மனிதர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்து அமைதியாக்கும் மையங்களாக கோயில்கள் உள்ளன.
அந்த வகையில் சேத்தூர் அருகே தேவதானம் வடக்கு வாசல் கருப்ப சுவாமி கோயில் முன்புறம் உள்ள மரத்தில், நாக கன்னி உருவத்தை பலரும் வழிபட்டு வருகின்றனர். கோயில் பூஜாரி ராஜா கூறுகையில், ‘ஐம்பது ஆண்டுகளை கடந்து நிற்கும் இலுப்பை மரத்தில், யாரோ ஒரு பக்தர் தன் வேண்டுதலை நிறைவேற்ற, மண்பாண்டத்தால் ஆன நாக கன்னி உருவத்தை வைத்து சென்றுள்ளார். நாளடைவில் இலுப்பை மரம் தனது பிடியில், நாக கன்னி உருவத்தை தாங்கி பிடித்து பீடம் போல் உருவாக்கி விட்டது. நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து சப்த கன்னியர் உருவங்களை வைத்து,வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டதால், இலுப்ப மரத்தடியில் உள்ள தெய்வமும் பிரபலமாகி வருகிறது,” என்றார். வழிபாடே மனிதர்களைக் காக்கும் கவசமாக இருந்து வருகிறது என்ற புரிதல், அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ள நிலையில், நாமும் நாக கன்னி கோயிலை தரிசித்து வரலாமே.