உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயில் அழகை மீட்க மத்திய அரசு உதவும்:நிர்மலா சீதாராமன் உறுதி

மதுரை மீனாட்சி கோயில் அழகை மீட்க மத்திய அரசு உதவும்:நிர்மலா சீதாராமன் உறுதி

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு  பணிகள் நடக்கின்றன. அதன் பாரம்பரியம், அழகை மீட்க மத்திய அரசு உதவும், என, மதுரையில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று(மே 3)  காலை அவர் தரிசனம் செய்தார். தீ விபத்து நடந்த பகுதி, ஆயிரங்கால் மண்டபம் பகுதிகளை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ், தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் விளக்கினர். சர்க்யூட் ஹவுஸ் திரும்பும் வழியில் தல்லாகுளத்தில் மண்டகபடி ஒன்றில் எழுந்தருளிய கள்ளழகரையும் அவர் பொதுமக்களுடன் மக்களாக தரிசித்தார்.

பின் அவர் கூறியதாவது: மீனாட்சி கோயிலில் தீ விபத்து நடந்த இடங்களில் கலெக்டர், கோயில் நிர்வாகம், அரசு சார்பில் புனரமைக்க நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மத்திய அரசும் உதவும். கோயிலின் அழகு, பாரம்பரியம் திரும்ப பெறப்பட வேண்டும். நாட்டின் பண்பாட்டு சின்னமாக கோயில் திகழ்கிறது. பக்தி, வழிபாடு, ஆன்மிகம், இந்து தர்மம் ஆகியவற்றின் மாடலாக திகழ்கிறது. நாடு முழுவதும் 1477 கிராமங்களில் ஆறு வகையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. ராமநாதபுரத்தில் 34, விருதுநகரில் 35 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றை கலெக்டர்களுடன் விவாதித்துள்ளோம், என்றார்.

ராமர்களுடன் போட்டோ: தல்லாகுளத்தில் அழகரை தரிசித்து வெளியில் வந்த நிர்மலா சீதாராமனை, ராமர், அனுமன் வேடம் தரித்தவர்கள் சந்தித்தனர். அவர்கள் கேட்டு கொண்ட தற்கு இணங்க, அவர்களுடன் நின்று போட்டோவும் எடுத்து வாழ்த்தி அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !