ஊத்துக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் வரும் (மே13) ல் தீமிதி திருவிழா
ஊத்துக்கோட்டை:ஓம் நவசக்தி பாதாள பொன்னியம்மன் கோவிலில், 13ம் தேதி, பால்குட அபிஷேகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
பூண்டி ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் உள்ளது ஓம் நவசக்தி பாதாள பொன்னியம்மன் கோவில்.
பழமை வாய்ந்த இக்கோவிலில், 11ம் தேதி முதல், மூன்று நாட்கள் திருவிழா துவங்குகிறது. அன்று, காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு தாய்வீட்டு வரிசை, அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை, 5:00 மணிக்கு, கங்கை கரையில் இருந்து கரகம் வீதியுலா, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீச்சட்டி எடுத்தல், அம்மன் அருள்வாக்கு ஆகியவை நடைபெறும்.
வரும், 12ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, கரகம் வீதியுலா, அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். காலை, 10:00 மணிக்கு, வெங்கடேச பெருமாளுக்கு பொங்கல் வைத்தல், கரகம் ஊர்வலம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வரும், 13ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், 9:00 மணிக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், அலகுபானை கத்தி நிறுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடைபெறும்.