உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐம்பொன் சிலைகளில் மோசடி: பழநி கோயிலில் விடிய விடிய ஆய்வு

ஐம்பொன் சிலைகளில் மோசடி: பழநி கோயிலில் விடிய விடிய ஆய்வு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ஐம்பொன் சிச்லை மோசடி வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களாக ஆய்வு நடந்தது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலைக்கு முன்னால் வைப்பதற்காக 2004ல் 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது. இதில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்ததாக அப்போதைய இணை ஆணையர் கே.கே.ராஜா, தலைமை ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்புபிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மீண்டும் விசாரிக்கிறார். இந்நிலையில் பொன்.மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி., ராஜாராம், டி.எஸ்.பி., கருணாகரன் குழுவினர்  பழநிக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் ஐ.ஐ.டி., உலோகவியல் துறை பேராசிரியர் முருகையா குழுவினர் இருநாட்களாக ஆய்வு செய்தனர்.

நேற்று முன்தினம் இரவில் துவங்கி விடிய விடிய ஆய்வு நடந்தது. மலைக்கோயிலில் ‘டபுள் லாக்கரில்’ உள்ள ஐம்பொன்சிலை மற்றும் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, நவவீரர்கள், கன்னிமார்கள் மற்றும் பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வாகனங்கள் வைப்பறையில் உள்ள உற்ஸவர் சிலைகளை ஆய்வு செய்தனர். மலைக்கோயிலில் நவவீரர்கள் சன்னதியில் இரண்டு சிலைகளுக்குரிய பீடம்,  சிலையை விட பல மடங்கு பெரிதாக இருந்தது. ‘கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்படிதான் உள்ளது’ என அதிகாரிகள் கூறியுள்ளனர். உற்ஸவர் சின்னக்குமாரர் சிலை சேதம் குறித்தும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வுக்கு பின் குருக்கள், அலுவலர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !