கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா விமரிசை
திருத்தணி : திருத்தணி அடுத்த, கீழாந்துார் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை, 24ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது. கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு, அம்மன் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், பக்தர்கள் காப்பு கட்டி, விரதமிருந்தனர். கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து, புனிதநீர் அடங்கிய கலசங்கள் நிறுத்தி, வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. பின், அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பெண்கள் பொங்கல் வைத்தும் படையலிட்டனர். மாலையில், பக்தர்கள் உடலில் அலகு குத்தி, பறவைக் காவடியாக அந்தரத்தில் தொங்கியபடியும், டிராக்டரை இழுத்துச் சென்றும், நேர்த்தி கடன் செலுத்தினர்.அப்போது, மேள தாளத்துடன் காளி, வீரபத்திரர், விநாயகர், முருகன், அம்மன் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்து, பூங்கரகத்துடன் நடனமாடி, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவு, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் விடையாற்றி புஷ்பலங்காரம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் திருத்தணி ஒன்றிய அமைப்பாளர் கோபி குருக்கள் ஆகியோர் செய்தனர்.