உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் பாரம்பரிய விளையாட்டுகள்!

பொங்கல் பாரம்பரிய விளையாட்டுகள்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, கிராமங்களில் "கிடா முட்டு பிரசித்தம். பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு அழிந்துவிட்ட நிலையில் மதுரை, தேனி என சில மாவட்டங்களில் விரல் விட்டு எண்ணும் அளவில் திரைமறைவில் போட்டி நடத்தப்படுகிறது.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டும், அதன் பின் பல நிபந்தனைகளுடன் இதை நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் கிடாச் சண்டைக்கு அனுமதி இல்லாததால், இதை ஏதாவது கிராமங்களில் நடத்தினால் நடவடிக்கை தொடர்கிறது. இதனால் சண்டை கிடாக்கள் வளர்ப்பும் குறைந்துவிட்டது. கிடாச்சண்டையில் நாட்டுக்கடா, பெங்களூரு குரும்பை ஆடுகள் தான் பங்கேற்கின்றன. பெங்களூரு குரும்பை சில ஆண்டுகளாக களத்தில் இறங்கி வருகின்றன. இதில் கருமறை, அணில்மறை, சாம்பல், இருசெல், சுத்தகுரும்பை என பல ரகங்கள். சண்டையில் இருசெல் ரகம், எப்படியும் ஜெயித்துவிடும் என்பதால் இதற்கு தான் கிராக்கி.மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தில் சண்டை கிடாக்கள் வளர்க்கும் முத்துசாமி கூறியதாவது: பொங்கல் என்றால் ஜல்லிக்கட்டிற்கு இணையாக கிடா சண்டையைத் தான் கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சண்டைக்கான கிடா ரகங்கள் ஒன்றுடன் ஒன்று, ஒருமுறை மோதினால் தான் சில நாட்கள் அமைதியாக இருக்கும். இது அவற்றின் குணம். ஒன்றுடன் ஒன்று சண்டையிடாமல் இருந்தால், அது வளர்ப்பவர்கள் மீதும் கட்டி வைத்திருக்கும் மரங்களையும் முட்டி தனது கோபத்தை தணிக்கும். இறைவன் இயற்கையாகவே இந்த இனங்களை சண்டைக்காகவே படைத்துள்ளான். எனவே இதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும், என்றார்.தமிழக கிராமங்களில் காணாமல் போன பல விளையாட்டுகளின் பட்டியலில், இந்த "கிடா முட்டும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் உயிர் சேதம் ஏற்படுவது இல்லை. போட்டிக்காக புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி, இந்த விளையாட்டு அழியாமல் காப்பாற்ற வேண்டும், என்பது தான் இந்த விளையாட்டை பாரம்பரிய கலாச்சார விழாவாக கொண்டாடும் கிராம மக்களின் விருப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !