பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே: இது பசுவுக்கான நேரம்!
இன்று மாட்டுப்பொங்கல் சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு "கோதூளி என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், "கோதூளி லக்னம் என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை,மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, "பிரம்ம முகூர்த்தம் என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.
ஒரு பிடி புல்லை போடுங்க! தர்மதேவதையின் வடிவமாகத் திகழும் பசுவைப் பாதுகாத்தால் உலகில் தர்மம் நிலைத்திருக்கும். தவம், தூய்மை, கருணை, சத்தியம் என்னும் நான்கும் நான்கு கால்களாக தர்மத்தை தாங்குகின்றன. கலியுகத்தில் கலியின் கொடுமை தீர கோபாலகிருஷ்ணரை வழிபட்டு பசுக்களைப் பாதுகாக்கவேண்டும். மகாபாரதத்தில், பீஷ்மர் தர்மத்தை உபதேசிக்கும்போது, கோசம்ரக்ஷணம் என்னும் பசுபாதுகாப்பு பற்றி விளக்குகிறார். பசுவைத் தானம் அளித்தால் பெரும் பாவம் கூட நீங்கும். ""எந்த நாட்டில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த நாட்டில் பாவம் என்பதே இருக்காது. அந்நாடே ஒளியுடையதாய் பிரகாசிக்கும், என்றுசியவன மகரிஷி கூறியுள்ளார். இதற்காக, பெரிய கோயில்களில் கோமடம் நிறுவி பசுக்களைப் பாதுகாத்தனர். ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தினக்கடமைகளில் ஒன்றாக, "கோகிராஸம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒருகைபிடி புல்லையாவது பசுவுக்கு கொடுப்பதே கோகிராஸம் எனப்படும்.