அத்திவரதர் வைபவம் குறித்த தகவல் பொய்: காஞ்சி வரதர் கோவில் அறங்காவலர் பேட்டி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள, அத்திவரதர் வைபவம் குறித்து, சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் தவறானது என, நிர்வாக அறங்காவலர் எம்.விஜயன் தெரிவித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 100 கால் மண்டபத்திற்கு வடக்கே உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில், நீராழி மண்டபத்திற்கு தென்திசையில், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபம் உள்ளது.
இந்த மண்டபத்தின் கீழே, நீருக்கு அடியில், கருங்கல்லாலான பாறைக்குள் மிகப்பெரிய அத்திமரத்தால் ஆன, பழைய அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். இவர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்காகவும், பூஜைக்காகவும், வழிபாடு நடத்தப்படுகிறது. இதில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். கடைசியாக, 1979ல், ஜூலை, 2ல், குளத்திலிருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு ஆக., 18ம் தேதி வரை விசேஷ வைபவம் நடந்தது. தற்போது, 40 ஆண்டு களுக்கு பின், வரும், 2019ல், அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவம், எந்த நாளில் துவங்க உள்ளது என்பது குறித்து, இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், சமூக வலைதளங்களில், 2019, ஜூலை, 15ல், அத்திவரதர், தெப்பகுளத்தில் இருந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து, உதவி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாக அறங்காவலர் எம்.விஜயன் கூறியதாவது: அத்திவரதர் வைபவம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில், எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. வரும், 2019ல், நடைபெறவுள்ள வைகாசி பிரம்மோற்சவத்திற்கு பின் தான், அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள் குறித்து, முடிவு செய்யப்பட்டு, முறையான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.