சிதம்பரம் நடராஜர் ஆனித் ஆனிதிருமஞ்சனம் குறித்து ஆலோசனை கூட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆனிதிருமஞ்சனம் குறித்து அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
21ம் தேதி ஆனித் திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.இதனையொட்டி கோவில் தீட்சிதர்கள், அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா, இன்ஸ்பெக்டர் குமார், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி அலுவலர்கள், மின்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தரிசன உற்சவம் பக்தர்கள் பாதிக்காத வகையில் மதியம் 2:00 மணிக்குள் நடத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த பணிகளை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதும், 30 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது. இந்த கூட்டம் வழக்கம் போல் சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்ட கூட்டமாகவே இருந்தது.
தடைக்கு மறுப்பு: கூட்டத்தில் தேரோட்டத்தின் போதும், தரிசனத்தின் போதும் பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கக் கூடாது. இதற்கு ஆர்.டி.ஓ., உத்தரவிட வேண்டும் என தீட்சிதர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஆர்.டி.ஓ., மற்ற பெரிய கோவில்களில் பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்க தடை இல்லை. மேலும், பொது இடத்திற்கு வந்த பின்னர் பத்திரிக்கையாளர்கள் படம் எடுப்பதைத் தடுக்க முடியாது என மறுத்து விட்டார்.