உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை ரம்ஜான் பண்டிகை

நாளை ரம்ஜான் பண்டிகை

சென்னை:பிறை தென்படாததால், ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால், இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் காலண்டரின் படி, இன்று ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவில், ஷவ்வால் மாத பிறை தென்படவில்லை என, இஸ்லாமியர்கள் தரப்பில், தமிழக அரசின் தலைமை காஜிக்கு, தகவல்கள் வந்தன. தமிழகத்தின் பெரும்பகுதியில், வானம் மேக மூட்டமாக காணப்பட்டதால், பிறை தென்படவில்லை.இதையடுத்து, இன்று கொண்டாடப்படுவதாக இருந்த, ரம்ஜான் பண்டிகை, நாளை கொண்டாடப்படும் என, தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து, அரசுக்கும் அவர், கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, இன்று அறிவிக்கப்பட்டுஇருந்த அரசு விடுமுறையை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால், நாளை அரசு விடுமுறை; இன்று, அரசின் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !