பெருமாள் கோவில்களிலும் இனி சமய பாடல் ஒலிக்கும்!
சிவ ஆலயங்களில், சமய பாடல்கள் பாட, ஓதுவார்கள் உள்ளது போல, திவ்ய தேசங்களிலும், வைணவ ஆலயங்களிலும், அத்யாபகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக கோவில்களில், சமய பாடல்கள் பாடுவது வழக்கத்தில் உள்ளது. சைவ கோவில்களில், ஓதுவார்களால், திருவாசகம், திருப்புகழ், திருமந்திரம் பாடப்படுகிறது.அதேபோல், வைணவ கோவில்களில், அத்யாபகர்களால், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை, பஜனை பாடல்கள், முன்னர் பாடப்பட்டன.
கால மாற்றத்தின் காரணமாக, இக்கோவில்களில், சமய பாடல் குறைந்து போனது, ஆனால், சிவ ஆலயங்களில் மட்டும், ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. வைணவ ஆலயங்களில், மார்கழி மாதத்தில், பக்தர்களால் மட்டும், பஜனை பாடல்கள் பாடப்படுகின்றன.இக்குறையை தீர்க்க, வைணவ ஆலயங்களில் சமயப் பாடல்களை பாட, அத்யாபகர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஓதுவார்கள், அத்யாபகர்களை உருவாக்கும் வகையில், பயிற்சி பள்ளி திட்டம், கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது, திவ்ய தேசங்கள், பிரதான வைணவ ஆலயங்களில், சமயப் பாடல்களை பாடுவதற்காக, அத்யாபகர்களை நியமிக்க, அறநிலையத் துறை முடிவு செய்துஉள்ளது.வைணவ கோவில்களில், தினமும் காலை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, நாலாயிர திவ்ய பிரந்தம்; மாலையில், நித்திய அனு சந்தானம் ஆகிய பாடல்கள், அத்யாபகர்களால் பாடப்படும் என, தெரிகிறது. இதன் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, சமயத்தை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளதாக, அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நமது சிறப்பு நிருபர் -