ஜம்முவில் மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்
ஸ்ரீநகர்,:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பலத்த மழை பெய்ததால், அமர்நாத் யாத்திரை துவங்கிய முதல் நாளிலேயே, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்வர். இந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரைக்கு, 1.96 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில், எட்டு பேர் உயிரிழந்ததையடுத்து, இந்த ஆண்டு, பலத்த பாதுகாப்புடன் யாத்திரை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், ஜம்முவில் இருந்து, 107 வாகனங்களில், 2,995 பக்தர்கள், யாத்திரைக்கு புறப்பட்டனர். பஹல்காம் மற்றும் பால்தால் முகாம்களுக்கு சென்றடைந்த பின், இரண்டு குழுக்களாக பிரிந்து, பனி லிங்கத்தை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்ல வேண்டும்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பலத்த மழை பெய்ததால், பக்தர் கள் தொடர்ந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அடுத்த, 48 மணி நேரத்துக்கு, மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், யாத்திரை மீண்டும் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.