திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மூலவர் வீரட்டானேஸ்வரர் தங்க கவசத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளிக் கவசத்திலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 5:00 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் உற்சவத்தில் 16 கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி உற்சவர் மற்றும் மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் மலையின் அடிவாரத்தை கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.