நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா
திருபுவனை: இந்திரா நகரில் அமைந்துள்ள விநாயகர், பாலமுருகன், இடும்பன், நவக்கிரக கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. சன்னியாசிகுப்பம் இந்திரா நகரில், சங்கர விநாயகர், பாலமுருகன், இடும்பன், நவக்கிரகங்கள், தட்சணாமூர்த்தி, விஷ்ணு, துர்கை, பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கியது.அன்று காலை 9:00 மணிக்கு புதிய சுவாமிகள் கிரிவலம் வருதல், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 30ம் தேதி காலை 11:00 மணிக்கு விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்கியது.முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், காலை 8:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்படுதல், மூலவர் மூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சன்னியாசிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 2:00 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை சன்னியாசிக்குப்பம் இந்திரா நகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.