உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவருள் பெரிது!

குருவருள் பெரிது!

‘ஈசுவரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?

ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர்- எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்துவிட்டால், நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ, அந்தச் சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால்தான், குருவருள் பெரிது என்பார்கள்.

குருர் ப்ரஹ்மா
குருர் விஷ்ணு: குருர்
தேவோ மஹேச்வர:

எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான், தக்ஷிணாமூர்த்திதான். காலத்தில் கட்டுப்படாதவர் ஆதலால் ஈசனே ஆதி குருவுக்கும் குரு.

நம் குருவுக்கும், அந்தக் குருவுடைய குருவுக்கும், அவருடைய குருவுக்கும் ஞானம் எப்படிப் பூரணமாக ஏற்பட்டிருக்கும்?

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக் கொண்டே போனால், கடைசியில் ஒருத்தருக்கு ஸாக்ஷாத் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தைத் தந்திருக்க வேண்டும் என்று தெரியும் அதனால்தான் தெய்வத்தை மறக்கக்கூடாது என்றார்கள். இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல், ஈசுவரனே குருவாக வந்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்று இரண்டை தனித் தனியாகக் கடைப்பிடிக்க வேண்டாம்.

குருவே ஈசுவரன் என்று கருதி, அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூரணமாகச் சரணாகதி பண்ணிவிடலாம். குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக, இல்லாவிட்டாலும் கூட, அவர் மூலமாக நாம் நித்ய சுத்தனும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி பண்ணுவதால், அந்த ஈச்வரனே அந்த குரு மூலமாக நமக்கு அனுக்கிரகம் பண்ணிவிடுவார். இதனால்தான் குருவையே ப்ரம்மா, விஷ்ணு,  சிவன் ஆகிய மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !