உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரணி போற்றும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா

தரணி போற்றும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா

தமிழகத்தின் புனிதநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கரவிழா அக்.12 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடுவோருக்கு புண்ணியம் சேரும்.   புஷ்கரம் என்பது பிரம்மாவின் கமண்டலத் தீர்த்தம். பூலோக உயிர்கள் அத்தீர்த்தத்தில் நீராடி  புண்ணியம் அடைய வேண்டும் என விரும்பினார் குருபகவான். அதற்காக தவத்தில் ஈடுபட்டார். அது கண்டு இரங்கிய பிரம்மா, “குருவே... உமக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார்.  “பிரம்ம தேவரே... உம் புஷ்கர தீர்த்தத்தை பூலோக உயிர்கள் நற்கதி பெறுவதற்காக என்னிடம் தந்தருள வேண்டும்” என்றார். பிரம்மா சம்மதித்தாலும், புஷ்கர தீர்த்தம் பிரம்மாவை விட்டுப் பிரிய விரும்பவில்லை. இந்நிலையில் இருவருக்கும் இடையில்  உடன்படிக்கை செய்தார் பிரம்மா. அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்குரிய நதியில் 12 நாள் புஷ்கரம் சேர வேண்டும் என்றும், அப்போது நீராடுவோருக்கு பாவம் போக்கியருள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் 12 புனிதநதிகள் 12 ராசிகளுக்கு உரியதாக இருக்கின்றன.

ராசி    –    நதி
மேஷம்    –    கங்கை
ரிஷபம்    –    நர்மதை
மிதுனம்    –    சரஸ்வதி
கடகம்    –    யமுனை
சிம்மம்    –    கோதாவரி
கன்னி    –    கிருஷ்ணா
துலாம்    –    காவிரி
விருச்சிகம்    –    தாமிரபரணி
தனுசு    –    சிந்து
மகரம்    –    துங்கபத்ரா
கும்பம்    –    பிரம்மபுத்ரா
மீனம்    –    பிரணீதா

குருபகவான் விருச்சிகராசிக்கு பெயர்ச்சியாவதை ஒட்டி அக்.12 முதல் 23 வரை  தாமிரபரணியில் புஷ்கரவிழா நடக்கிறது. இப்புண்ணிய காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள், ரிஷிகள் வாசம் செய்வதால் நீராடுவோருக்கு மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரதோஷம் அகலும். இந்நாளில் அன்ன தானம், வஸ்திர தானம் செய்வது நல்லது. பசுதானம் அளிப்போருக்கு மோட்சம் கிடைக்கும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய பிதுர் சாபம் நீங்கும். பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையுள்ள 143 படித்துறைகளில் எதில் நீராடினாலும் பலன் ஒன்றே.

சூரிய உதயத்திற்கு முன்பாக பிரம்மமுகூர்த்த காலத்தில் (அதிகாலை 4:30 – 6:00)  நீராடுவது மிகச்சிறப்பு. இந்நாட்களில் குருத்தலங்களான தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர், ஆழ்வார்திருகரி ஆதிநாதப்பெருமாள் கோயில்களை தரிசிப்பதும் நன்மையளிக்கும்.  தாமிரபரணியில் நீராடி பிறவிப்பயன் பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !