மதுராந்தகம் ஏரியில் மழை வேண்டி யாகம்
மதுராந்தகம்: போதிய மழைப் பொழிவு இல்லாததால், மதுராந்தகம் ஏரியில், மழை யாகம் நடத்தப்பட்டது.மதுராந்தகம் சுற்று வட்டார விவசாயிகள், வடகிழக்குப் பருவ மழையை, பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். செய்யூர் தாலுகாவிற்கு, இந்த மழைப் பொழிவு தான் விவசாயத்திற்கான மூலாதாரமாக உள்ளது.
ஆனால், இந்த ஆண்டு, இந்தப் பருவத்தில் பெய்ய வேண்டிய மழை இது வரை பெய்யவில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர் வரத்தின்றி காணப்படுகின்றன.
இதற்கிடையே, இப்பகுதிகளில் மழை வேண்டி, மதுராந்தகம் பகுதி விவசாயிகள் மதுராந்தகம் ஏரியில், ஜலகண்டேஸ்வரருக்கு களி மண்ணால் சிலை அமைத்து, நேற்று (நவம்., 20ல்) மதியம், யாகம் நடத்தினர்.கிராமப் பகுதி கோவில்களில் நடக்கும் விழா போல, பம்பை, உடுக்கை, மேள தாளங்கள் முழங்க, யாகம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, நேற்று (நவம்., 20ல்) மாலை, 3:00 மணி முதல், மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைப் பொழிவு இருந்தது.