உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய்களை குணமாக்கும் முனியப்பன்: நுாதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

நோய்களை குணமாக்கும் முனியப்பன்: நுாதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேட்டூர்: பாசக்கார நாயின் நோயை குணமாக்கியதால் மகிழ்ந்த பக்தர்கள், முனியப்பனுக்கு கிடா வெட்டி, நாயின் உருவ பொம்மை செய்து வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேட்டூர் அடுத்த, காவேரிகிராஸில், பவானி நெடுஞ்சாலையோரம், முத்து முனியப்பன் கோவில் உள்ளது. பஸ், கனரக வாகன டிரைவர்கள் பலர், காலையில், முனியப்பனை வணங்கி விட்டு, பணியை தொடங்குகின்றனர். சுற்றுப்பகுதி பக்தர்கள், தங்கள் நோய் குணமாக, வேலை கிடைக்க, முனியப்பனை வணங்கி வேண்டுதல் வைக்கின்றனர். அவர்கள் வேண்டுதல் நிறைவேறினால், கோவில் வளாகத்தில் உருவபொம்மை செய்து வைப்பதோடு, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.   

இதுகுறித்து, பூசாரிகள் கூறியதாவது:  ஓராண்டுக்கு முன், அருகில் வசிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு, தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதித்தது. அவர் உடல்நலம் சீராகி, நல்ல முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற, பெற்றோர் வேண்டுதல் வைத்தனர். அது நிறைவேறியதால், பெற்றோர், வேண்டுதலை நிறைவேற்ற, மாணவி போலவே உருவபொம்மை செய்து, கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். இளைஞர் ஒருவர், காவலர் வேலை கிடைக்க, வேண்டுதல் வைத்தார். வேலை கிடைத்ததால், சீருடை அணிந்த காவலர் பொம்மை செய்து வைத்து விட்டார். அருகிலுள்ள, நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், நாயை மிகவும் செல்லமாக வளர்த்தார். இரு மாதங்களுக்கு முன், அது உடல்நலம் பாதித்தது. அது குணமடைய, முனியப்பனிடம் வேண்டினார். நாயும் குணமடைந்து விட்டது. தன் பாசக்கார நாய் குணமடைந்ததால் மகிழ்ச்சியடைந்த பக்தர், முனியப்பனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தியதோடு, தன் நாய் போன்ற உருவபொம்மையை செய்து, கோவில் வளாகத்தில் வைத்துள்ளார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், உருவபொம்மை செய்து கோவில் வளாகத்தில் வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !