உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில்27 அடி உயரத்தில் வீர ஆஞ்சநேயர் சிலை!

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில்27 அடி உயரத்தில் வீர ஆஞ்சநேயர் சிலை!

கன்னியாகுமரி:கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி உயரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் பல்வேறு சமூக, கல்வி மற்றும் ஆன்மிக பணிகளை செய்துவருகிறது. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை இந்தியா முழுவதும் ஒரு ஆண்டு காலம் கொண்டாட விவேகானந்த கேந்திரம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 5 கோடி ரூபாய் செலவில் ராமாயண கண்காட்சி கூடம் கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. ராமாயண இதிகாசத்தில் உள்ள கதைகள், தத்துவங்கள் போன்றவை இங்கு காட்சி வடிவமாக விளக்கும் வகையில் 124 கதை சிற்பங்கள் அமைக்கப்பட உள்ளன. ராமர் பிறப்பு, வனவாசம் அனுபவித்தல், சீதை கல்யாணம், பட்டாபிஷேகம் போன்ற ராமாயணத்தின் ஒவ்வொரு நிலைகளும் விளக்கப்பட உள்ளது. அதற்காக தற்போது உள்ள அவைக்கூடம் மற்றும் அதற்கு அருகில் உள்ள வாலிபால் மைதானம் பகுதிள் அகற்றப்பட்டு இரண்டு அடுக்கு கண்காட்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த ராமாயண கதைகள் வடிவமைக்கப்படுகிறது. விரைவில் இந்த பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா துவங்க உள்ளது. 27 அடி உயர ஆஞ்சநேயர்5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் ராமாயண காட்சி கூடத்தின் முன் பகுதியில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட உள்ளது. ஆஞ்சநேயர் பல வடிவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இன்றய இளைஞர்களுக்கு மன உறுதியும் உற்சாகமும் வீரமும் மிகவும் அவசியம். சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு கூறிய உபதேசம் போல இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கையில் கதாயுதத்துடன் வீரமாக நிற்கும் ஆஞ்சநேயர் சிலை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்று விவேகானந்த கேந்திரம் கருதுவதால் வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !