திருப்புத்துார் யோக பைரவர் சம்பக சஷ்டி விழா: டிச.8ல் துவக்கம்
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி பெருந்திருவிழா டிச.,8 ல் துவங்குகிறது.இக்கோயிலில் யோகநிலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார். யோகபைரவருக்கு ஆண்டு தோறும் கார்த்திகை வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரையுள்ள காலம் சம்பகசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழா டிச.,8 ல் துவங்குகிறது. அன்று காலை 9:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் துவங்குகிறது. தொடர்ந்து பூர்ணாகுதி நடந்து பைரவருக்கு அபிேஷகம், தீபராதனை நடக்கும். பைரவர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பார். மாலை 4:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம், பூர்ணாகுதி,அபிேஷகம், தீபாராதனை நடைபெறும். பைரவர் சந்தனக் காப்பில் அருள்பாலிப்பார். ஆறு நாட்களிலும் தினசரி காலை ,மாலை இருவேளைகளில் யாகசாலை பூஜை நடைபெறும். யாகசாலை பூஜை தற்போது புதிதாக பைரவர் சன்னதி முன் மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்படும் புதிய யாகசலையில் நடைபெற உள்ளன.