அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.அன்னியூர், மன்னியூர் என்றழைக்கப்படும் அன்னுாரில், 1,300 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியில், அன்னி என்னும் வேடன், சிவபக்தன், அங்கு மரவள்ளிக்கிழங்கை வெட்டியுள்ளான். வெட்டியபின்பும் கிழங்கு குறையாமல் இருந்தது. இதையடுத்து அதன் வேரை வெட்டியுள்ளான். அதிலிருந்து ரத்தம் வந்துள்ளது.இத்தகவல் அறிந்து சேர மன்னன், தன் பரிவாரங்களுடன் வந்து ரத்தம் வந்த இடத்தில் தோண்டியுள்ளான். மண்ணுக்கு அடியில் சிவலிங்கம் இருந்தது. அதை பெயர்த்து எடுக்க முயற்சித்த போது அது வரவில்லை. அப்போது ஒலித்த அசரீரி, இந்த இடத்தில் கோவில் எழுப்பி வழிபாடுமாறு தெரிவித்தது. இதையடுத்து இங்கு கோவில் எழுப்பப்பட்டதாக ஐதீகம். இங்கு மூலவராய் உள்ள சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது மிகவும் விசேஷமானது.
இக்கோவிலில், 2000ம் ஆண்டில் தேரோட்டம் துவங்கியது. 2004ல் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோவிலில், முருகப்பெருமான், அருந்தவச்செல்வி அம்மன், விநாயகர், சூரியன், சந்திரன், சனி பகவான், நவகிரகங்கள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.நேற்று காலையில் திருமுறை பண்ணிசை பாடல்கள் இசைக்கப்பட்டன. காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபரர் தலைமை வகித்தார். தாசபளஞ்சிக சங்கம் சார்பில், சீர்வரிசையுடன் பெருமாள் கோவிலிலிருந்து பக்தர்கள் மன்னீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை 7:45 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் உள்பட பல துறவிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.