உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி தேரோட்டம்

ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி தேரோட்டம்

ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாளான நேற்று சுவாமி அம்பாள் தேரோட்டம் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து 5 முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின் வழக்கமான பூஜைகளை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் கிழக்கு வாசலில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், தக்கார் குமரன் சேதுபதி, நகராட்சி தலைவர் அர்ச்சுனன், பா.ஜ.,தேசிய குழு உறுப்பினர் முரளீதரன் பெரிய தேரின் வடத்தை பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்க, பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதியில் உலா வந்த தேர் பகல் 12.15மணிக்கு நிலைக்கு வந்தது.புனித நீராடல்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமிக்கு எட்டு கால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, கங்கை நீர் கலசங்களுடன் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ருத்ராபிஷேகமும் நடந்தது. கோயில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள 108 லிங்கத்திற்கும் சிவராத்திரி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று காலை முதல் இரவு வரை தங்களது கைகளால் பால், பன்னீர், விபூதி மற்றும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !