பொள்ளாச்சி புத்தாண்டுக்கு கோவில்களில் வழிபாடு சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி பலரும் குடும்பத்துடன், கோவில்களுக்கு சென்று வழிபாடு
செய்தனர்.
பொள்ளாச்சி கடை வீதியில், ஸ்ரீ பால கணேசர் கோவிலில், விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜோதிநகர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சிவபெருமான் தங்க கவச அலங்காரத்திலும்; விசாலாட்சி அம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோன்று, ஆங்கில புத்தாண்டையொட்டி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள பல்வேறு சர்ச்களிலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
* வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:30 மணிக்கு கணபதி பூஜையும், 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும்
நடைபெற்றது.
இதே போல் வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன்கோவில், அக்காமலை பாலாஜிகோவில், சோலையார் சித்திவிநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று (ஜன., 1ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன.
வால்பாறை, சி.எஸ்.ஐ., தேவாலயம், ஆர்.சி., சர்ச், சென்லுக் சர்ச், கருமலை வேளாங்கண்ணி ஆலயம், ரொட்டிக்கடை புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.