மத்தளேஸ்வரர் கோவிலில் புதிய வாயிற்படி நிலை நிறுத்தம்
ADDED :2453 days ago
செஞ்சி: மேலச்சேரி பிரகன்ன நாயகி சமேத மத்தளேஸ்வரர் கோவிலில் வாயிற்படி நிறுத்தப்பட்டது. செஞ்சி அடுத்த மேலச்சேரியில் கி.பி., 4ம் நுாற்றாண்டை சேர்ந்த பிரகன்ன நாயகி சமேத மத்தளேஸ்வரர் குடைவரை கோவில் உள்ளது.
பழமை காரணமாக இந்த குடைவரை கோவிலின் முன்பிருந்த கல் மண்டபங்கள் இடிந்து விழுந்து வந்தன. இதை பாதுகாக்க கிராம மக்களும், பக்தர்களும் முடிவு செய்து 30 பேர் கொண்ட திருப்பணி குழு அமைத்து கடந்த ஜூன் மாதம் திருப்பணியை துவக்கினர். இதுவரை கோவில் கிணறு, முன் மண்டபம், விநாயகர், முருகர், நந்தி சன்னதிகளை புதுப்பித்துள்ளனர். நேற்று முன்மண்டத்தில் பெரிய வாயிற்படி அமைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து காலை 7:00 மணிக்கு வாயிற்படி நிலை நிறுத்தினர். தொடர்ந்து மத்தளேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனை நடந்தது.