குருவாயூரில் தரிசன முறையில் மாற்றம்: கலச பூஜை துவங்கியது!
குருவாயூர் :சகஸ்ர கலச பூஜை, வரும் மார்ச் 4ம் தேதி துவங்க இருப்பதால், அதற்கு முன்னோடியாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் கலச பூஜைகள், நேற்று மாலை துவங்கின. கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உற்சவங்கள் துவங்குவதற்கு முன்பாக, கலச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். நேற்று மாலை தீபாராதனை நிகழ்ச்சிக்குப் பின், கோவிலில் கலச பூஜை துவங்கியது. கோவில் தந்திரி சேனாஸ் வாசுதேவன் நம்பூதிரிபாடு தலைமையில், துவங்கிய பூஜைகளின் தொடர்ச்சியாக, இன்று ஹோமங்கள் நடைபெறும்.வரும் மார்ச், 4ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கலச பூஜைகள், பிரம்ம கலசாபிஷேகத்துடன் நிறைவுறும். அதுவரை, கோவிலுக்குள் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, வடக்குவாசல் வழியாக, கோவிலுக்குள் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, அதே வழியாக வெளியேற வேண்டும். சிறப்பு பூஜை காரணமாக, கோவிலில் திருமணம் செய்யும் மணமக்கள், கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி இருக்காது.ஆனால், மணமக்கள் கோவில் வாசலில் நின்று சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வழக்கமாக உள்ள சிறப்பு வரிசை இருக்காது. மார்ச், 4ம் தேதி பிரம்மகலச பூஜை முடிந்த பிறகு, மறுநாள் 5 மணிக்கு, கோவிலில் யானை ஓட்டம் நிகழ்ச்சி நடைபெறும். அதை தொடர்ந்து, உற்சவத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெறும். மார்ச், 14ம் தேதி வரை கோவிலில் உற்சவம் நடைபெறும்.