உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளாநல்லி சிவன் கோவிலில் திருப்பணி

கொளாநல்லி சிவன் கோவிலில் திருப்பணி

ஈரோடு : கருமாண்டாம்பாளையம் கொளாநல்லியில் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பாம்பலங்காரர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் திருப்பணிக்காகவும், கும்பாபிஷேகத்துக்கும், 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கோவில்கள், கும்பாபிஷேகம் காணாத நிலையில், சிதிலமடைந்து காணப்படுகிறது. இதில் கருமாண்டபாளையம், கொளாநல்லி, பாம்பலங்காரர் ஸ்வாமி கோவிலும் ஒன்று. 500 ஆண்டுகள் பழமையான இக்கோவில் இயற்கை எழிலுடனும், ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. அப்பகுதியிலேயே மிகவும் தொன்மையான கோவில் என்பதால், தினமும் பக்தர்கள் பலர் பாம்பலங்காரரான சிவனை வழிபட்டு செல்கின்றனர். இந்தியாவிலேயே இரட்டை நந்தியை கொண்ட ஒரே சிவன் கோவிலாக, கொளாநல்லி பாம்பலங்காரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் வசூல் கொட்டிய இக்கோவிலை, 1969ம் ஆண்டு அறநிலையத்துறையின் கீழ் செயல்பட அரசு உத்தரவிட்டது. கடந்த பல ஆண்டாக இக்கோவிலை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், சிதிலமடைந்து காணப்பட்டது. இதுபற்றி, "காலைக்கதிர் நாளிதழில் ஜன., 11ம் தேதி செய்தி வெளியானது. தற்போது, இக்கோவிலில் திருப்பணிகள் துவங்கியுள்ளது. திருப்பணி, கும்பாபிஷேகத்துக்காக, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ""கொளாநல்லி பாம்பலங்காரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள, ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவில் கோபுரங்கள் அனைத்தும் இடித்து, புதிய கோபுரங்களை அமைக்கப்படும். கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்படும். பணிகளின் முடிவில் நிதி பற்றாக்குறை குறித்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !