கோதண்டராமர் சிலை செல்ல தற்காலிக பாலம் அமைக்கும் பணி
ஓசூர்: கோதண்டராமர் சிலையை, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டு, கோதண்டராமரின் முகம், இரு கைகள் வடிவமைக்கப்பட்டன. கடந்த நவ., 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் கோதண்டராமர் சிலை ஏற்றப்பட்டு, கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டது. எட்டு நாட்கள் போராட்டத்துக்கு பின், மேலுமலை தேசிய நெடுஞ்சாலை மேட்டில் ஏறி, சாமல்பள்ளம் பகுதியை, கடந்த, 8ல் லாரி வந்தடைந்தது. கடந்த, மூன்று நாட்களாக, சாமல்பள்ளம் முனீஸ்வரன் கோவில் அருகே, சுவாமி சிலை ஏற்றி வந்த வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே, தற்காலிக சாலை அமைக்கும் பணி, நேற்று (பிப்., 12ல்) நடந்தது.
ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடைந்து, தற்காலிக சாலை வழியாக சூளகிரி அருகே சின்னாறு பகுதியை கோதாண்டராமர் சிலையை ஏற்றிய வாகனம் அடையும் என, அதிகாரிகள் கூறினர்.