உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலூர் எருமாடு சிவன் கோவில் கொடியேற்று விழா

பந்தலூர் எருமாடு சிவன் கோவில் கொடியேற்று விழா

பந்தலூர்: பந்தலூர் எருமாடு சிவன் கோவில் கொடியேற்று விழாவில், பள்ளிவாசல் கமிட்டியும் பங்கேற்றது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பந்தலூர் அருகே, எருமாடு சுற்றுவட்டார பகுதிகளை, ஆங்கிலேயர் காலத்தில், கேரளாவை ஆட்சி செய்த சேர மன்னர் ஆட்சி செய்தார். அந்த காலகட்டத்தில் மாநில எல்லையான எருமாடு பகுதியில் சிவன் கோவில் உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து, திப்பு சுல்தான் படையெடுப்பின்போது, கோவிலில் இருந்த பழமையான விலை மதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.அதனையடுத்து, மன்ன ராட்சி ஒழிப்பிற்கு பின், இப்பகுதியில் உள்ள மலையாள மொழி பேசும் இந்துக்கள், தங்கள் கட்டுப் பாட்டில் இந்த பழமையான கோவிலை நிர்வகிக்க துவங்கினர்.பின்னர் இப்பகுதியில் குடியேறிய அனைத்து தரப்பு இந்துக்களும் இணைந்து திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். எனினும், இந்த பகுதியில் கோவில் வளாகத்தில் உள்ள மைதான சர்ச்சை தொடர்பாக, இங்குள்ள இரு சமுதாய மக்கள் மத்தியில் அவ்வப்போது பிரச்னைகளும், போராட்டங்களும் நடந்து வந்தன.இதனால், ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிவராத்திரி திருவிழாவின்போது, போலீசார் இரு மத அமைப்பினரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பல்வேறு விதிமுறைகளுடன் திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழா துவக்கம் முதல் இறுதிவரை மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் வருவாய்துறை அதிகாரிகள், எஸ்.பி., மேற்பார்வையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.


இதனால், இந்த விழா முடியும் வரை அசாதாரண சூழல் நிலவும். இந்நிலையில், நடப்பாண்டின் திருவிழாவை சிறப்பாக நடத்தும் வகையில், இப்பகுதியில், டி.எஸ்.பி., ராமசந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கோவில் கமிட்டியினரும், பள்ளிவாசல் கமிட்டியினரும் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.அதனை இரு தரப்பினரும் ஏற்று கொண்ட நிலையில், நேற்று  (மார்ச்., 1ல்), நடந்த கோவில் திருவிழா கொடியேற்று விழாவுக்கு நிர்வாகி சுந்தரம் தலைமை வகித்தார்.

அதில்,கோவில் கமிட்டி சார்பில் சதானந்தன்,முரளி,தாமோதரன்; பள்ளிவாசல் கமிட்டி சார்பில் ஜமால், ரஷீத்,வாப்புஹாஜி, வியாபாரிகள் சங்க தலைவர் அலியார்; டி.எஸ்.பி.ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சசீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.போலீசார் கூறுகையில், இப்பகுதியில் நடக்கும் திருவிழாக்களின் போது, இரு மதத்தினரும் பங்கேற்று சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும். இதன்மூலம் எருமாடு பகுதியில் தொடரும் அசாதாரண சூழலை போக்க முடியும் என்றனர். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !