தமிழகத்தில் மரபு சின்னங்களை "க்யூஆர்" கோடு மூலம் 360 டிகிரி காட்சிகளாக பார்க்க தொல்லியல் துறை ஏற்பாடு
தஞ்சாவூர், தமிழகத்தில் பழமையான தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள ஆறு மரபுச் சின்னங்களை "க்யூஆர்" கோடு மூலம் செல்போனில் 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்க முடியும்.
தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர் காலத்தில் ஏராளமான கோவில்கள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆட்சி செய்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் பழமையான கட்டிடங்கள், கோவில்களை பழமை மாறாமல் தமிழக தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் 91 மரபுச்சின்னங்களையும் பாதுகாத்து வருகிறது. இதில் முதல் கட்டமாக ஆறு மரபுச்சின்னங்களை செல்போன் மூலம் 360 டிகிரி கோணத்தில் "க்யூஆர்" கோடு உதவியுடன் கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதில் அரியலுார் மாவட்டத்தில் கீழப்பழுவூரில் உள்ள இரட்டைகோவில், திருச்சி மாவட்டத்தில் திருவெள்ளாரையில் உள்ள ஸ்வதிக் கிணறு, துாத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, காஞ்சிபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோளீஸ்வரர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாச அரண்மனை, விழுப்புரம் மாவட்டத்தில் செத்தவரையில் உள்ள பாறை ஓவியம் ஆகிய ஆறு இடங்களையும் "க்யூ ஆர்" கோடு வசதியுடன் செல்போன் மூலம் பார்த்து ரசிக்க முடியும்.
இதுகுறித்து தஞ்சாவூர் தொல்லியல் அலுவலர் தங்கதுரை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பழமையான மரபுச்சின்னங்களை தற்போதுள்ள நவீன வசதிகளின் உதவியுடன் கண்டுகளிக்கும் வகையில் முப்பரிமாண காட்சிகளாக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக ஆறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக மரபுச் சின்னங்கள் உள்ள இடங்களிலும் இதுகுறித்து அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள "க்யூ ஆர்" கோடினை தங்களது செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், அந்த மரபுச்சின்னங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்க முடியும். இதை போல தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பாலத்துறை நெற்களஞ்சியம், திருச்சென்னம்பூண்டி சடைமுடிநாதர்கோவில், மனோரா, மானம்பாடி நாகநாதசுவாமிகோவில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மணிகோபுரம், ஆயுதகோபுரம், தர்பார்ஹால், ஷார்ஜா மாடி ஆகிய 8 மரபு சின்னங்களையும் விரைவில் பார்க்க முடியும் என்றார்.