ஈரோட்டில், கோவில் கடைகளின் ஏலம்: சுவாமி தரிசனத்துக்கு தடை
ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் விழா, 19 முதல், ஏப்ரல், 8 வரை, நடக்கிறது. இதை முன்னிட்டு, கோவிலை ஒட்டிய சாலையோரம் கடைகள் அமைக்கப்படும்.
இவை, சித்திரை தமிழ் வருட பிறப்பு வரை, தொடரும். இந்தாண்டு, 40 கடைகளுக்கு, அறநிலையத்துறை சார்பில், ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோவில், ஆண்டாள் சுவாமி மண்டபத்தில், மதியம், 3:30 மணிக்கு, ஏலம் துவங்கியது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி தலைமை வகித்தார். செயல் அலுவலர், ரமணிகாந்தன் முன்னிலை வகித்தார். வழக்கம் போல் நேற்றும் மார்ச்., 5ல், 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
ஆனால், ஏலம் நடந்ததால், 5:45 மணி வரை, பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல, அனுமதிக்கப் படவில்லை. கோவில், ஆகம விதிகளை மீறி, ஆண்டாள் சன்னதி மண்டபத்தில், அறநிலையத் துறை அதிகாரிகள் ஏலம் நடத்தியதாக, பக்தர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்தாண்டு ஏலம் எடுத்தவர்கள், இந்தாண்டு எடுக்கக்கூடாது என்ற ஒப்பந்தம், ஈரோடு பெரிய மார்க்கெட் ஏல விவகாரம், ஒருவருக்கே, 40 கடைகளுக்கான உரிமம் வழங்காதது, போன்றவற்றால், ஏலதாரர்களில் ஒரு தரப்பினர், ஏலம் எடுக்க முன்வரவில்லை. எனவே, 40 கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. 13ல் மீண்டும் நடக்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.