பொன்னேரி தேரில் பவனி வந்த அகத்தீஸ்வரர்
பொன்னேரி:பங்குனி பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு, பொன்னேரி அகத்தீஸ்வரர், மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்ன வாகனக் காட்சி, சூரிய பிரபை, சிம்ம வாகனம் என, தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான நேற்று (மார்ச்., 17ல்), திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. காலை, 7:30 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக வலம் வந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ பெருமான் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேர் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் உற்சவம் தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது.