ஓசூர் பேட்டராய சுவாமி தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, பேட்டராய சுவாமி மற்றும் கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில், மூன்று மாநில பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தரவள்ளி சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. தேர்த்திருவிழா கடந்த, 1ல், பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (ஏப்., 16ல்) காலை, 11:15 மணிக்கு நடந்தது.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீது, ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் வாழைப்பழம், உப்பு போன்றவற்றை தேர் மீது வீசி சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் தேர் நிலையை அடைந்தது.
விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
* ஓசூர் அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் (ஏப்., 15ல்) துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு காசியாத்திரை நிகழ்ச்சி, இரவு, 9:00 மணிக்கு கல்யாண உற்சவம், கஜவாகன உற்சவம் நடந்தது. நேற்று (ஏப்., 16ல்) அதிகாலை, 5:00 மணிக்கு வாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவத்தை தொடர்ந்து, 11:00 மணிக்கு தேர்த்திருவிழா நடந்தது. வெங்கடேஸ்வரா சுவாமி மற்றும் லட்சுமிதேவி அம்மன் தனித்தனி தேரில், முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 9:00 மணிக்கு பிருந்தாவன உற்சவம், 50 பல்லக்கு உற்சவம் நடந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு வசந்த உற்சவம், தெப்ப உற்சவம், 30 பல்லக்கு உற்சவம் நடக்கிறது.