கிணத்துக்கடவு முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுத்து வழிபாடு
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு முத்துமாரியம்மன் கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர்.கிணத்துக்கடவு, மணிகண்டபுரம் முத்துமாரியம்மன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த, 12ம் தேதி துவங்கியது.கடந்த, 18ம் தேதி, திருமூர்த்தி மலையில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.
நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பெண்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பொங்கலிட்டு வழிபடுதல், ஆற்றில் இருந்து பூவோடு எடுத்து வருதல் நிகழ்வு நடந்தது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
இதையொட்டி, அம்மனுக்கு பச்சைபட்டு உடுத்தி சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.நேற்று (ஏப்., 22ல்) காலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மாலையில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது.