திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி
திருத்தணி:திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.
திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, 12ம் தேதி, கொடி ஏற்றத்துடன் துவங்கியது.தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு, மஞ்சள் காப்பு போன்ற பூஜைகள் நடந்தன.பத்து நாட்கள் தொடர்ந்து நடந்த விழாவில், பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு, தெருக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன; அம்மன் உற்சவமும் நடந்தது.நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) காலையில், துரியோதனன் வதம் எனும் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து, பெண்கள் வழிபட்டனர்.இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, அக்னி குண்டத்தில் தீ மிதித்து, தங்கள் நேர்த்திக்கடனை, நேற்று (ஏப்., 22ல்) செலுத்தினர்.
தொடர்ந்து, உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவை ஒட்டி, கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி அமைப்பினர், கிராம மக்கள் செய்தனர்.