புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி நுாற்றாண்டு விழா: 17ம் தேதி துவக்கம்
சென்னை:புதுக்கோட்டையில் அமைந்துள்ள, லட்சுமி நரசிம்ம சுவாமியின், நுாற்றாண்டு விழா, வரும், 17ம் தேதி முதல், 10 நாட்கள் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகரின் கீழ் மூன்றாவது வீதியில், கோபாலகிருஷ்ண பாகவத சுவாமி நாம சங்கீர்த்தன மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள, கோபாலகிருஷண் பாகவத சுவாமி திவ்ய சன்னதியில், லட்சுமி நரசிம்ம சுவாமியின் நுாற்றாண்டு விழா, வரும், 17 முதல், 26ம் தேதி வரை, 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை, புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி அறக்கட்டளை நடத்துகிறது. தினமும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பாகவதர்கள் பங்கேற்கும், சிறப்பு பஜனைகள் நடைபெறும். அனைத்து விதமான ஹோமங்களும் நடத்தப்படும். வேத மந்திரங்களும் ஓதப்படும்.நுாற்றாண்டு விழா துவக்க நாளான, வரும், 17 முதல் சம்பூர்ண நாராயணீயத்தின் பாராயண நிகழ்ச்சி நடைபெறும். அதன் நிறைவு நாளான, 23ம் தேதி, சுவாமியின் திருக்கல்யாண நிகழ்வான, வசந்தோற்சவம் நடைபெறும்.
24ல் ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலையுடன், விசேஷ பூஜைகள் செய்து வழிபடும், பக்தோற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.அடுத்த நாளான, 25ம் தேதி, நாள் முழுவதும், ராமனின் திருப்பெயரை உச்சரிக்கும், அகண்ட ராமநாம ஜபம் நடைபெறும். நிறைவு நாளான, 26ம் தேதி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பஜனைகளை பாடி சிறப்பித்த, 108 பாகவதர்களுக்கு, பாதபூஜை செய்து மரியாதை செலுத்தும், பாகவத ஆராதனை நிகழ்ச்சி நடைபெறும். இவற்றுடன், நித்யபடி பூஜை, அபிஷேகம், உஞ்சவிருத்தி, நான்கு வேத ஸம்ஹிதா பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 96639 33599, 94865 42444 என்ற, மொபைல் போன் எண்களில், அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பேசி தெரிந்து கொள்ளலாம்.