உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடைகருப்பசாமி கோவிலில் 320 ஆண்களுக்கு கறி விருந்து

மடைகருப்பசாமி கோவிலில் 320 ஆண்களுக்கு கறி விருந்து

சிவகங்கை:சிவகங்கை அருகே, திருமலையில், மடைகருப்பசாமி கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு, 320 ஆடுகள் பலியிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. திருமண தடை, மழை பெய்து விவசாயம் செழிக்க போன்ற வேண்டுதலுக்காக, பழமையான இக்கோவிலில் சித்திரை திருவிழா நடக்கும். ஏப்., 26ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. அன்று முதல், ஆண்கள் மட்டும் விரதம் துவக்கினர். காப்பு கட்டியதும் கோவில் வளாகத்தில் உள்ள கண்மாய் மடைகள் அடைக்கப்பட்டன.

எட்டாம் திருநாளான, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு திருமலை கிராமத்தில் இருந்து ஏராளமான ஆண்கள் நேர்த்திக் கடனுக்காக அரிவாள், மணி, கோவில் காளைகள், கறுப்பு நிறமுள்ள, 320 வெள்ளாடுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மலைக்கொழுந்தீஸ் வரர் கோவிலில் தீர்த்தம் எடுத்து, மண்பானையில் கருப்பருக்கு பொங்கல் வைத்து  வழிபட்டனர். நேர்த்திக்கடனாக வந்த, 320 ஆடுகளை கருப்பருக்கு பலியிட்டனர். நேற்று முன்தினம் இரவு, 1:30 மணிக்கு கருப்பருக்கு பலியிட்ட ஆடுகள், பச்சரிசி சோற்றை ஏற்க வேண்டி, கவுளி சத்தம் கேட்டனர். கருப்பரிடம் உத்தரவு பெற்றதும், 6,000 பக்தர்களுக்கு பச்சரிசி சோற்றை உருட்டி கறிக்குழம்புடன் பிரசாதம் வழங்கினர்.இங்கு சமைத்த உணவை, சாப்பிட்டு காலி செய்த பிறகே, பக்தர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால், இரவு, 3:00 மணி வரை, பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.பின், 320 ஆடுகளின் தோலை எரித்து, வீட்டிற்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !