வாழப்பாடி பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடிமரம் அமைக்க வலியுறுத்தல்
வாழப்பாடி: பேளூர், தான்தோன்றீஸ்வரர் கோவிலில் காற்றில் முறிந்து விழுந்த கொடிமரத்து க்கு பதிலாக, புதிய கொடிமரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தினர். வாழப்பாடி
அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக உள்ளது. திருமணத்தடை நீங்கிட, இங்குள்ள கல்யாண விநாயகரை வணங்கினால் திருமணம்
கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழா காலங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
விழா காலங்களில் கொடியேற்றப்படுவதும், பக்தர்கள் கொடிமரத்தை முதலில் வணங்கி, பின்னரே மூலவரை தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். அதன்படி, கோவில் வளாகத்தில், 25 ஆண்டுக்கு முன் ஆகம விதிப்படி, பலி பீடத்துக்கு அடுத்தபடியாக, 38 அடி உயரம் கொண்ட, செப்பு தகடு பொருத்தப்பட்ட கொடிமரம் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு வீசிய பலத்த காற்றில், கொடிமரம் முறிந்து விழுந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சசிகலா கூறியதாவது: புதிய கொடிமரம் அமைக்க, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். லோக்சபா தேர்தல் விதி நடைமுறையில் உள்ளதால், அனுமதி கிடைப்பது தாமதமாகிறது. அனுமதிக்கு பின் புதிய கொடிமரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.