உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசைலம் சிவசைலநாதர்

சிவசைலம் சிவசைலநாதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிக்க திருத்தலம் சிவசைலம். வெள்ளிமலை, மேற்குத் தொடர்ச்சி மலை, முள்ளிமலைகளால் சூழப்பட்ட இங்கு, சுவாமி சிவசைலநாதர் என்றும், அம்மன் பரமகல்யாணி என்றும் அழைக்கப்படுகின்றனர்..  அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. தென்காசியில் இருந்து 27 கி.மீ.யிலும், ஆழ்வார்குறிச்சியில் இருந்து 6 கி.மீ.,யிலும் இக்கோயிலுக்கு செல்லலாம். கடனா நதியின் கரையில் உள்ள இந்தக்கோயிலை அத்திரி மகரிஷி, அனுசுயா, கோரக்கர், பிருகு முனிவர்கள் வழிபட்டுள்ளனர்.

விநாயகர், முருகன், நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, நடராஜர், கோரக்க நாதர், அன்னபூரணி, மகாலட்சுமி, ஜுரதேவர், துர்கை, நெல்லையப்பர், காந்திமதிக்கு சன்னதிகள் உள்ளன.

சாதாரணமாக கோயில்களில் நந்திதேவர் கால்களை மடித்த நிலையில் இருக்கும். ஆனால் இங்கு முன்னங்கால்களை ஊன்றி எழுந்த நிலையில் இருக்கிறார். தேவலோகத்தின் தலைமைச் சிற்பியான மயனால் உருவாக்கப்பட்டவர் இவர்.

ஒருமுறை தேவர்களின் தலைவர் இந்திரனுக்கு சாபம் ஏற்படவே, சிவபெருமானை சரணடைந்தார். மேற்கு நோக்கிய சிவலிங்கம் இருக்கும் தலத்தில், நந்தி சிலை பிரதிஷ்டை செய்தால் விமோசனம் கிடைக்கும் என சிவன் வழிகாட்டினார்.
அதன்படி சிலை வடிக்கும் பொறுப்பு சிற்பியான மயனிடம் ஒப்படைத்தார் இந்திரன். பூலோகத்திலுள்ள சிவசைலத்திற்கு வந்த மயன் பணியை தொடங்கினார். நந்தி சிலை முழுமை பெற்றதும்  உயிர் பெற்றது.

முன்னங்கால்களை ஊன்றி, நந்திதேவர் எழத் தயாராகவே, மயன் நடுங்கினார். நந்தியின் முதுகில் உளியினால் அழுத்தினார். அதன்பின் சிலை அங்கேயே தங்கி விட்டது. இந்திரனின் சாபமும் தீர்ந்தது.

இன்றும் நந்தியின் உடம்பில் உளியால் அழுத்திய தழும்பை பார்க்கலாம். பிரதோஷ பூஜையில் நந்தி அபிஷேகத்தைத் தரிசிக்க பக்தர்கள் திரளாக கூடுவர். ஆடி மாத கடைசி வெள்ளியன்று நந்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

அத்திரி மகரிஷி பூஜித்த சிவசைலநாதர் கருவறையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு ’அத்ரீஸ்வரர்’ என்றும் பெயர் உண்டு.  

கைலாயத்தில் சிவ, பார்வதி திருமண வைபவத்தைக் காண பெருங்கூட்டம் கூடியது. இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரின் தலைமையில் ரிஷிகள் தெற்கு நோக்கி புறப்பட்டனர். அப்போது உடன் வந்த அத்திரியும், அவரது மனைவியான அனுசூயாவும் சிவசைலம் மலையில் தங்கி தவத்தில் ஈடுபட்டனர். அதன் பலனாக அவருக்கு சுயம்புத் திருமேனியாகக் காட்சியளித்தார்.
எப்படி தெரியுமா?

பூமிக்கு மேலே ஒரு பாகமும் (3 அடி), பூமிக்குக் கீழே 15 பாகமும் (45 அடி) கொண்டு சுயம்பு லிங்கமாக காட்சியளித்தார். ’சைலம்’ என்ற சொல்லுக்கு பாறை, கல் என்பது பொருள். கல்லில் தோன்றியதால் ’சிவசைல நாதர்’ எனப்பட்டார்.
அவருக்கு அத்திரி மகரிஷி அமைத்த கோயில் இது. கருவறையில் சுவாமி மேற்கு நோக்கி இருக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம் இங்குள்ளது.

வாரிசு இல்லாத மன்னரான சுதர்சன பாண்டியன், இத்தலத்தில் குறை தீர அஸ்வமேத யாகம் நடத்தினார். சிவனருளால் குழந்தை பிறக்கவே மகனுக்கு, ’குமரபாண்டியன்’ என பெயரிட்டு வளர்த்தார். இவரே  திருப்பணி முடித்து முதன்முதலில் கும்பாபிஷேகம் நடத்தினார்.  

ஒருமுறை இந்த மன்னருக்கு அர்ச்சகர் பிரசாதமாகக் கொடுத்த பூச்சரத்தில் முடி ஒட்டியிருந்தது. அதை கண்டதும் மன்னர் அதிர்ச்சியானார். தன் தவறை மறைக்க எண்ணிய அர்ச்சகர்,  ’சுவாமிக்கு சிகை(கூந்தல்) உள்ளது’ என பொய் சொன்னார்.  
மன்னரின் தண்டனையில் இருந்து அர்ச்சகரைக் காப்பாற்ற சிவனும் குடுமியுடன் காட்சியளித்தார். தலைமுடியுடன் கூடிய சுவாமியை கருவறையின் பின்புறமுள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம். இதனால் ’சடையப்பர்’ என்றும் இவருக்கு பெயருண்டு.

பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் இருக்கிறாள். எங்கும் இல்லாத அதிசயமாக விழாக் காலத்தில் அம்மன் இடதுகையில் தங்க கைக்கடிகாரம் அணிவிப்பது சிறப்பு.  

பங்குனித் திருவிழாவில் பரமகல்யாணியம்மன் தேரினை பெண்கள் மட்டுமே இழுக்கின்றனர். தன்னை நாடி வரும் கன்னியர், காளையருக்கு திருமணத்தடை போக்கி  மணவாழ்வு தருபவளாக திகழ்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !