அத்தி வரதர் வைபவத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 1ல், அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் இருந்து, தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடு, தீவிரமாக நடக்கிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ல், அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இந்த விசஷேத்தை ஒட்டி, கோவிலில் பல முன்னேற்பாடுகள் நடக்கின்றன.அதில் ஒரு பகுதியாக, அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியை, எல் அண்டு டி தனியார் நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.இது குறித்து, இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:மேற்கு ராஜகோபுரம் அருகே உள்ள, அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் தண்ணீரை, கிழக்குராஜ கோபுரம் அருகே உள்ள பொற்றாமரை குளத்தில் விடுவதற்கான பணி, 15ம் தேதி துவங்கியது. இதற்காக, பாசி படர்ந்துள்ள பொற்றாமரை குளம், துார் வாரி சீரமைக்கப்படுகிறது.இரு குளத்திற்கும் இடையே, 250 மீட்டர் நீளத்திற்கு, 10 அங்குலம் பைப் அமைக்கப்பட்டு உள்ளது.நீர் இறைப்பதற்காக, 60 எச்.பி., குதிரை திறன் உடைய இரண்டு நீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.ஒவ்வொரு மோட்டாரும், நொடிக்கு, 2,000 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன்கொண்டவை.மோட்டார்களை இயக்கிய இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில், குளத்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, கோவில் உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அறங்காவலர், ந.தியாகராஜன் கூறியதாவது: வரதராஜ பெருமாள் கோவிலில், வரும், 31ல் வசந்த உற்சவம் துவங்குகிறது. உற்சவத்தின் நிறைவாக, அனந்தசரஸ் தெப்பக்குளத்தில், ஜூன், 6ல், தீர்த்தவாரி நடைபெறும். அதன் பின், குளத்து நீர் இறைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கடைசியாக, 1979ல், ஜூலை, 2ல், குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு, ஆக., 18ம் தேதி வரை, விசஷே வைபவம் நடந்தது.