உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகின் மிக உயரமான 146 அடி முருகன் சிலை: பணி தீவிரம்

உலகின் மிக உயரமான 146 அடி முருகன் சிலை: பணி தீவிரம்

 ஆத்துார், சேலம், புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன், 78. இவர், 2015ல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 60 ஏக்கர் நிலம் வாங்கினார்.

அதில், 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் அமைத்து, விற்பனை செய்தார். அதே இடத்தில், 2 ஏக்கர் பரப்பளவில், மலேஷியாவில் உள்ள முருகன் சிலை போன்று, இங்கு வடிவமைக்க முடிவு செய்தார்.மலேஷியா முருகன் சிலையை வடிவமைத்த, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன், 47, என்பவரை அழைத்து வந்தார். உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலையை, 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவு செய்து, 2016, செப்., 6ல், பூமி பூஜை போட்டு, பணிகளை துவக்கினார்.கடந்தாண்டு, முத்து நடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது குடும்பத்தினர், முருகன் சிலை அமைக்கும் பணிகளை, தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஸ்தபதி தியாகராஜன் கூறியதாவது:மலேஷிய தலைநகரான, கோலாலம்பூர் அருகே, பத்து மலை குகைக் கோவில் நுழைவு வாயிலில், அந்த நாட்டைச் சேர்ந்த, செல்வந்தரான கே.தம்புசாமி என்பவருக்கு, 2006ல், 140 அடி உயரத்தில், மிக நேர்த்தியாக, முருகன் சிலையை அமைத்து கொடுத்தேன்.

அந்த சிலையை விட, 6 அடி அதிகமாக, 146 அடி உயரத்தில், இங்கு முருகன் சிலை அமைக்கப்படுகிறது.சிலையை, 22 சிற்பிகள், 10 உதவியாளர்கள் மூலமாக செய்து வருகிறேன். மலேஷியா முருகன் சிலையில், வேல் பிடித்தது போல் இருக்கும்; இங்குள்ள முருகன் வலது கையில் ஆசீர்வாதம், இடது கையில் வேல் மற்றும் சிரித்த முகத்துடன், தலையில் மணிமகுடம் என, சிலை அமைக்கப்படுகிறது.தற்போது ஆடை, அணிகலன்கள் அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆசியா கண்டத்திலும், உலகளவிலும் மிகப்பெரிய முருகன் சிலையாக இருக்கும் என்பதால், இந்த சிலையால், ஆத்துார், சிறந்த சுற்றுலா தலமாக மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.திருப்பணிகள் குழு நிர்வாக இயக்குனரும், தொழிலதிபருமான ஸ்ரீதர் கூறியதாவது:முருகனை குலதெய்வமாக வணங்கி வந்த, என் தந்தை முத்து நடராஜன் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்கேற்ப, உலகளவில் உயரமான முருகன் சிலை அமைக்கும் பணியை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கினோம்.வரும், 2020, பங்குனி உத்திரத்திற்கு முன், சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த சிலை அருகில், ஆறுபடை முருகன் சிலைகளும், ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !