கேதார்நாத் குகையில் முன்பதிவு முடிந்தது
டேராடூன் உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில், பிரதமர் மோடி தியானம் செய்த, குகை பிரபலம் அடைந்து வருகிறது. இங்கு தியானம் செய்ய, போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலம், இமயமலையில், 12 ஆயிரத்து, 500 அடி உயரத்தில், கேதார்நாத் கோவில் அருகே, குகை ஒன்றில் தியான அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவுமாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், கர்வால் மண்டல் விகாஸ் நிகம் லிமிடெட் என்ற நிறுவனம், இந்தக் குகையை பராமரிக்கிறது.குகையில் தியானம் செய்ய, இந்நிறுவனத்தின் இணையதளம் மூலம், முன்பதிவு செய்ய வேண்டும். கட்டணம், 990 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த, மே, 18ல், பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் தரிசனம் முடித்த பின், அன்று இரவு முழுவதும் தியான குகையில் தங்கினார். அவர் தியானம் செய்த படம், பத்திரிகைகள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பரவியது. இதையடுத்து, இந்தக் குகையில் தியானம் செய்ய, ஏராளமானோர் போட்டி போட்டு, முன்பதிவு செய்கின்றனர்.இதுபற்றி, கர்வால் மண்டல் விகாஸ் நிகம் பொது மேலாளர், ரானா கூறியதாவது:கேதார்நாத்தில், மே, 9 முதல், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர் மோடி, தியானக் குகைக்கு ஏற்கனவே, இருமுறை வந்துள்ளார். இருப்பினும், பிரதமராக அவர் வந்தது, கடந்த மே மாதத்தில் தான். அதன்பிறகு, கேதார்நாத் வரும் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த, 50 நாட்களில் மட்டும், ஏழு லட்சத்து, 62 ஆயிரம் பேர் வந்து உள்ளனர். இந்த ஆண்டு, 10 லட்சம் பேருக்கு மேல் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தியானக்குகையில் தங்க, ஜூலை மாதத்துக்கான முன்பதிவு முடிந்து விட்டது. சீரமைப்புஇங்கு ஒருநாள் இரவு தங்க, 990 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, தியானம் செய்யும் வகையில் குகையை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.கடந்த, 2013ல் பெய்த கன மழையால், கேதார்நாத்தில் பல பகுதிகள் கடும் சேதம் அடைந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகளும் நடக்கின்றன. பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், சீரமைப்பு பணிகளை விசாரித்து வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.