உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி கோயிலில் பூந்தட்டு ஊர்வலம்!

தென்காசி கோயிலில் பூந்தட்டு ஊர்வலம்!

தென்காசி :தென்காசி மேலமுத்தாரம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூந்தட்டு ஊர்வலம் நடந்தது. தென்காசி மேலமுத்தாரம்மன் கோயிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருந்திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அபிஷேகம், தீபாராதனை, இரவு மண்டகப்படி தீபாராதனை, சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல் நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று மதியம் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் செண்பக விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பூந்தட்டு ஊர்வலம் துவங்கியது. செண்பகவிநாயகர் கோவில் தெரு, கூலக்கடை தெரு, கன்னிமாரம்மன் கோவில் தெரு வழியாக மேலமுத்தாரம்மன் கோயிலுக்கு பூந்தட்டு ஊர்வலம் சென்றது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பூக்கள் நிறைந்த தட்டை ஏந்தி சென்றனர். அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு யாதவர் சமுதாய மண்டகப்படி தீபாராதனை நடந்தது. இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். விழாவின் 10ம் நாளான இன்று (29ம் தேதி) பூக்குழி திருநாள் திரவுபதி அம்மனுக்கு திருக்காப்பு பூட்டுதல், பால்குடம் ஊர்வலம், அபிஷேகம், தீபாராதனை, இரவு பூங்கிரகம் புறப்படுதல், மண்டகப்படி தீபாராதனை, பூத வாகனம், பூங்கோயில் வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல் நடக்கிறது. 11ம் திருநாளான நாளை (30ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !